2022 காலிமுகத்திடல் போராட்டத்தில் ஊடகவியலாளர்கள் எதிர்கொண்ட சவால்கள் ; ஆய்வு அறிக்கை கையளிப்பு
2022 காலிமுகத்திடல் போராட்டத்தின் போது ஊடகவியலாளர்கள் எதிர்கொண்ட சவால்கள், பிரச்சினைகள் குறித்து ஆய்வு நடத்துவதற்கு இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் ஒரு ஆய்வுக் குழுவை நியமித்தது.
சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் டாக்டர் ரஜ்னி கமகே மற்றும் ஹரீந்திர பி.தசநாயக்க மற்றும் அபர்ணா ஹெட்டியாராச்சி ஆகிய சுயாதீன ஆய்வுக் குழுவால் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
2022ஆம் ஆண்டு மார்ச் 30 மற்றும் ஆகஸ்ட் 31 க்கு இடையில் இடம்பெற்ற சம்பவங்களை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
இலங்கையில் ஊடகவியலாளர்கள் நீண்ட காலமாக சமூக மற்றும் அரசியல் ஸ்திரமற்ற சூழலில் பணியாற்றி வரும் சூழல் இந்த விசாரணை அறிக்கை இலங்கையில் கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் ஒரு முறையான வேலைத்திட்டத்தின் அவசியத்தை எடுத்துக் காட்டியுள்ளதுடன், சமூகத்தின் பல்வேறு மட்டங்கள் ஒன்றிணைந்து செயற்படுவது முக்கியமானது எனவும் விளக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பாதுகாப்புப் படையினருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதன் மூலம், மோதல் அறிக்கையிடலில் இரு தரப்பினரும் பணியாற்றுவதன் மூலம் சேதத்தை குறைக்க முடியும்.
ஆய்வு அறிக்கையின் நகல் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவவுக்கு அறிக்கையின் நகல் வழங்கப்பட்டது.
ஆய்வாளர் ஹரீந்திர பி.தசநாயக்க மற்றும் இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் தலைவர் துமிந்த சம்பத், செயலாளர் சு.நிஷாந்தன், பொருளாளர் டி. நடராசா, குழு உறுப்பினர் லக்ஷ்மன் முத்துதந்திரிகே ஆகியோர் அடங்கிய குழுவே இந்த ஆய்வு அறிக்கையை கையளித்து.



ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்கிரமவின் வீடுமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைவன்மையாகக் கண்டிக்கின்றோம் 
14.02.2022
கொழும்பு
ஊடக அறிக்கை
ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்கிரமவின் வீடுமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைவன்மையாகக் கண்டிக்கின்றோம்
ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்கிரமவின் வீடுமீது ஆயுதம் தாங்கிய நபர்களால், பெப்ரவரி 14 ஆம் திகதி அதிகாலை நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை இலங்கை உழைக்கும் ஊடகவியலாளர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
நாட்டில் ஊடக சுதந்திரத்துக்கு இவ்வாறு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி, ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபடும் நபர்களை பாதுகாப்பதே இத்தகைய தாக்குதல்களின் நோக்கம் என்பது தெளிவாகின்றது. ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை, காணாமல் ஆக்கப்பட்டமை, தாக்கப்பட்டமை மற்றும் ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுத்து, நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி ‘கறுப்பு ஜனவரி’ நினைவுகூரப்பட்டு ஒரு மாதம் நிறைவடைவதற்குள் இத்தகையதொரு தாக்குதல் இடம்பெற்றுள்ளமை ஊடக சமூகத்துக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது.
ஊடக நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக கடந்த காலங்களில் குற்றங்கள் இழைத்தவர்கள் இன்னும் சட்டத்தின்முன் நிறுத்தப்படாமல், சுதந்திரமாக உலா வருவதும் இப்படியான தாக்குதலுக்கு ஆசிர்வாதமாக அமைவதாக எமது சங்கம் கருதுகின்றது.
ஊடகவியலாளர் சமுதித சமரவிக்கிரவின் வீடுமீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பித்து, குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
சமுதித சமரவிக்கிரமவின் ஊடகப் பணி தொடர்பில் ஏதேனும் தரப்பினருக்கு பிரச்சினை இருப்பின், அது தொடர்பில் நாட்டின் சட்டத்திற்கு அமைவாக உரிய அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்ய வேண்டும். அதைவிடுத்து ஊடக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் விடுக்கும் விதத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள இத்தகைய கோழைத்தனமான தாக்குதல்லை எமது சங்கம் வன்மையாகக் கண்டிகின்றது. இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க இலங்கையிலும் சர்வதேச அளவிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகைள மேற்கொள்ள எமது சங்கம் தயங்காது.
துமிந்த சம்பத், பிராங்க் டி சொய்சா ,
தலைவர் செயலாளர்